சென்னை:

ன்று அதிகாலை முதல் தமிழகத்தில் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் 1800 அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும், இதில் பெரும்பாலான அதிகாரிகள் வெளி மாநிலத்தை சேர்ந்த வர்கள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில்  அதிகமான அதிகாரிகள் பங்குபெற்று, அதிக இடங்களில் சோதனை நடைபெறுவது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு சோதனை இதுவரை நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது சசிகலாவின்  பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் போலியான நிறுவனங்கள் என்று தெரிய வந்ததை தொடர்ந்து, சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

அதன்படி, சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன், அவர்களது உறவினர்களின் நிறுவனங்கள், வீடுகள், ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட் உள்பட 187 இடங்களில் அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த அதிரடி சோதனையை 6 ஆணைகள் முன்னெடுத்துச்செல்ல 1800 அதிகாரிகள் சோதனையிட்டு வருவதாகவும், ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 5 முதல் அதிக பட்சமாக 12 பேர் வரை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும்,

ஜெயா டிவியில் நடைபெற்று வரும் சோதனையின் போது ஏற்கனவே 8 அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், தற்போது மேலும் 6 அதிகாரிகள் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சோதனையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான அதிகாரிகள்,  கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், சோதனையின்போது பல ஆவணங்கள் பிடிபட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நடைபெற்றுள்ள வருமான வரி சோதனையிலேயே இதுவே அதிகமான இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சோதனை என்றும், அதுபோல ஆயிரக்கணக்கான வருமான வரித்துறை அதிகாரிகள் பங்குபெற்று சோதனை செய்யும் சோதனையும் இதுதான் என்று கூறப்படுகிறது.

தமிழகம் வருமான வரி சோதனையிலும் சாதனை படைத்துள்ளது வெட்கக்கேடானது.