மோக்திஸ், சோமாலியா

சோமாலியாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

சோமாலியா நாட்டின் தலைநகரம் மோக்திஸ் ஆகும்.   இந்நகரில் பல முக்கிய அமைச்சகங்களை குறி வைத்து நேற்று வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.   லாரி ஒன்றில் வெடிகுண்டுகளை எடுத்து வந்து தீவிரவாதிகள் வெடிக்க வைத்துள்ளனர்.  இந்த குண்டு வெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர்.  பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 189 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  சுமார் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு சோமாலிய அதிபர் அப்துல்லாஹி முகமது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும் 3 நாட்களுக்கு இரங்கல் அனுசரிக்கப்படும் எனவும் காயம் அடைந்தவர்களுக்கு உதவ மக்கள் ரத்ததானம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.    மீட்புப் பணியில் உள்ள அதிகாரிகள் இது போன்ற ஒரு கொடூரத் தாக்குதலை இதுவரை தாங்கள் கண்டதில்லை என தெரிவித்துள்ளனர்.

இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் இதற்காக பொறுப்பேறவில்லை.   ஆனாலும் சோமாலிய அரசு இந்த தாக்குதலை அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப்தான் நிகழ்த்தியிருக்கும் என கூறி உள்ளது,