அஸ்ஸாம்: கள்ளச் சாராயம் விற்ற பெண்ணின் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடி தூவி தண்டனை

கவுகாத்தி:

கள்ளச் சாராயம் விற்ற பெண்ணை அடித்து பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடி தூவி தண்டனை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அஸ்ஸாம் கிராமத்தில் நடந்துள்ளது.

குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக அஸ்ஸாம்-மிசோராம் எல்லையில் உள்ள நாக்ரா அவுட்போஸ் பகுதியில் உள்ள பழங்குடியின கிராமத்தில் ஒரு பெண் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். கிராம கட்டுப்பாடு என்ற பெயரில் அந்த பெண்ணை, கிராமத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக சேர்ந்து அடித்து உதைத்தனர்.

அப்போது அவரது பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி தண்டனை வழங்கியுள்ளனர். கடந்த 10ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.

தாக்குதலுக்கு ஆளான பெண் புகார் அளிக்க முன்வரவில்லை என்ற போதிலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கரீம்கங் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இதன் பின்னர் போலீசார் கிராமத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். தன்னை தாக்கியவர்களை அந்த பெண் அடையாளம் காட்டவில்லை. எனினும் வீடியோ மற்றும் விசாரணை மூலம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண்களும் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்தார். மேலும், ஒழுங்கீன செயல்களுக்கும் அவர் இடமளித்து வந்தார். கிராமத்தினரும், போலீசாரும் எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அவற்றை நிறுத்தவில்லை என்று கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி