சென்னை: சென்னை நகரிலுள்ள 19 கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 19 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், சளி மற்றும் காய்ச்சல் என அறிகுறி உள்ளவர்களை இங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்கவும், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை மட்டும், அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக, 30 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.