பம்பா:

பரிமலையில் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக கேரள தேவசம் போர்டு தகவல் தெரிவித்து உள்ளது.

கேரளாவில் உள்ள பிரபலமான அய்யப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்துபக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக  கடந்த நவம்பர் மாதம் 16ந்தேதி நடை திறக்கப்பட்டது.  சுமார் 60 நாட்கள் திறந்திருக்கும் இந்த காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருவது வழக்கம்.

கடந்த மாதம் (கார்த்திகை) முதல் மார்கழி 11ம் தேதி வரை சபரிமலையில் மண்டல காலம் ஆகும்.  இந்த 41 நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம்  கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது.  இந்த நிலையில், இந்த வருடம் சபரிமலை வந்த பக்தர்களில் 19 பேர் மாரடைப்பால் மரணத்தை தழுவி உள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

பம்பையில் 15 பேரும்,  கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்து இருப்பதாகவும்,  தற்போது நடைபெறும் மண்டல காலத்தில் பம்பை கணபதி கோவிலில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை 15 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த முகாம்கள் மூலம்,  மொத்தம் 30,157 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.