டில்லி:

நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் 19 மாநிலங்களில் பணியாற்றிய 9.2 கோடி தொழிலாளர்களுக்கு 3 ஆயிரத்து 66 கோடி ரூபாய் சம்பளம் நிலுவை இருப்பது தெரியவந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் முதலும், அஸ்ஸாம், கர்நாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப், தமிழ்நாடு, உ.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், கேரளா, ஒடிசா, ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் மாதம் முதலும், உத்தர்காண்ட், பீகார், திரிபுரா, குஜராத், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் மாதம் முதலும் சம்பளம் நிலுவை உள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னர் தான் கடந்த ஆண்டிற்கான அறிக்கையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் தான் இரண்டாவது தவணை தொகையை மத்திய அரசு வழங்கும்.

மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சக அறிக்கையின் படி இந்த நிதியாண்டிற்கு இது வரை 40 ஆயிரத்து 480 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 20 நாட்களுக்கான சம்பளத்தை மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை. மே மாதத்துகான நடைமுறைகளே இன்னும் தொடங்காத நிலை உள்ளது.

‘‘அறிக்கை சமர்ப்பிக்காத மாநிலங்களுக்கு தான் குறித்த நேரத்தில் நிதி அளிக்கப்படவில்லை. இதில் குஜராத், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், மிசோராம், நாகாலாந்து, ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்கள் அடங்கும்’’ என்று இத்திட்ட உதவி அமைப்பாளர் அன்கிதா அகர்வால் தெரிவித்துள்ளார்.