Random image

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்!: உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்க  உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் தொடுத்த வழக்கில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழியாக்கம் செய்யப்படாத 49வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் சிபிஎஸ்இக்கு 4 வினாக்களை எழுப்பி அதற்குப் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தனர்.  வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், நாடு முழுவதும் ஒரேபோலத் தேர்வு நடத்த வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்த கொள்கையின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டதாகவும், மொழிபெயர்ப்பில் சரியான விடைகள் இல்லாவிட்டால் ஆங்கில விடைகள் இறுதியானது எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் வாதாடினார்.

இதையடுத்து, சிபிஎஸ்இ பெரும்பான்மை அடிப்படையில் விடைகளைத் தீர்மானிப்பதாகவும், சர்வாதிகார முறையில் செயல்படுவதாகவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். பீகாரில் தேர்வு எழுதிய மாணவர்களைவிட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர்.

 

வழக்கு நிலுவையில் இருந்தபோதே தேர்வு முடிவை வெளியிட்டுத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பை அளித்தது.

அதில், “196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக தமிழில் எழுதிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும். புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.