கொரோனா வைரஸ் (SARS-CoV-2) 2019 – இல் சீனாவில் உருவாகி, COVID-19 என்னும் தொற்று நோயை உண்டாக்குகிறது. SARS-CoV-2 தொற்று பல்வேறு மருத்துவரீதியான சிக்கல்களை உண்டாக்கி, அறிகுறியற்ற தொற்றுநோயாக இருப்பது முதல் மரணம் வரை ஏற்படுத்துகிறது. இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோன மார்ச் 11, 2020 அன்று WHO ஆல் ஒரு பெருந்தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி, உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனை நெருங்கிக் கொண்டுள்ளது. சுமார் ~ 800000 மக்கள் இறந்துள்ளனர். COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார அமைப்புகள் ஸ்தம்பித்துள்ளன. உலக அளவிலான பொருளாதாரம் கடுமையாக சரிவடைந்துள்ளது. சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள், சாதனங்கள் என அனைத்திற்கும் பற்றாக்குறை நிலவுகிறது. அதே சமயம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தற்போது 137-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் சுமார் 23 மருந்துகள் முன்னணியில் உள்ளன. எப்படியாயினும் SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான சிறந்த பலனைப் பெற ஒன்று அல்லது இரண்டு டோஸ்கள் கொடுக்கப்பட வேண்டியிருக்கலாம்.  வயதானவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் உட்பட இணை குறைபாடுகளைக் கொண்டவர்களுக்கு தடுப்பு மருந்தின் பாதுகாப்பு கண்டிப்பாகத் தேவை.
கொரோனா வைரஸ்கள் மேற்புறம் புரத உறையால் சூழப்பட்ட, ஒற்றை ஹெலிக்ஸ் மற்றும் ஒற்றை இழை ஆர்.என்.ஏ-வை மரபணுவாகக் கொண்ட வைரஸ் ஆகும். இதன் மேற்பரப்பு புரத உறையின் மீது பூங்கொத்து போன்ற அமைப்புடன் புரத நீட்ச்சிகளைக் கொண்டது. இது ஒரு கிளைக்கோ புரதம் ஆகும். இது “ஸ்பைக் புரோட்டீன்” என்று அழைக்கப்படுகிறது. வைரஸ் தொற்று ஏற்பட்டு வைரஸ்கள் நமது உடலில் நோயெதிர்ப்பு செல்களை தாக்கும் போது இந்த  “ஸ்பைக் புரோட்டீன்” நமது செல்களை வைரஸ்கள் பலமாகப் பற்றிக் கொள்ள உதவுகிறது. மேலும், நமது செல் சவ்வின் மேற்பரப்பில் துளையிட்டு செல்லின் உள்நுழையவும் உதவி செய்கிறது. கொரோனா வைரஸ் நோய்தொற்றில் “ஸ்பைக் புரோட்டீன்” முக்கிய பங்கு வகிப்பதால், தடுப்பு மருந்து கண்டறிதலில் இது ஒரு முக்கிய இலக்காகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு, மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மத்திய கிழக்கு நாடுகள் சுவாசக குறைப்பாடுகள் நோய் உண்டாக்கிய கொரோனா வைரஸின் (MERS-CoV) ஸ்பைக் புரதத்தை இலக்காகக் கொண்டு சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டர் உதவியுடன் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து “ChAdOx1 MERS” ஒரே டோஸில் விலங்குகளுக்கு பாதுகாப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தீவிர சுவாசக் குறைபாடு கொரோன வைரஸ் 2 (SARS-CoV-2), COVID-19 நோய் உருவாக முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. COVID-19 ஐத் தடுக்க தற்போது அதிகார பூர்வ உரிமம் பெற்ற தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை. “ChAdOx1 nCoV-19” ஆனது முன்னர், நிமோனியாவுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பு அளிப்பதாக கண்டறியப்பட்டு இருந்தது. மேலும், SARS-CoV-2 க்கு எதிராக ஒரு அடினோவைரஸ் -5-வெக்டர் சார்ந்த ஒரு தடுப்பு மருந்து குறித்து சீனாவில் செய்யப்பட்ட ஒரு சோதனையை விவரிக்கும் மருத்துவ பரிசோதனையை அடிப்படையாக வைத்து ஆக்ஸ்போர்ட் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கி தற்போது பலகட்ட சோதனைகளை செய்து முடித்துள்ளது.
நோயாளிக்கு இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதும் அவர்களின்  உடல் நிலை மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஏற்றுக் கொண்டது. மேலும், வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு செயல்பாடுகள் செயல்படத் தொடங்கின. கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்தின் அளவுகளின் விகிதத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகள் மற்றும் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு வெள்ளை செல்களின் செயல்பாடுகள் அதிகரித்தது கண்டறியப்பட்டது.

இந்த தடுப்பு மருந்து ஒரு மரபணு முறையில் மாற்றம் செய்யப்பட்ட, நமது நோயெதிர்ப்பு செல்லுடன் இணையக் கூடிய, வைரஸின் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதி ஆகும். இந்த தடுப்பு மருந்து மூன்று டோஸ்கள் வரை கொடுக்கப்படலாம்.
இந்த தடுப்பு மருந்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கொடுக்கப்பட்ட டோஸ்களின் அளவுக்கு ஏற்றவாறு நோயெதிர்ப்பு செயல்பாடுகள் துவக்கப்பட்டன மற்றும் அதிகரித்தன. அதிலும் உயர்ந்த அளவு டோஸ்களில் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் உடனடியாக தூண்டப்பட்டன.
மருந்து கொடுக்கப்பட்டதும், ஏற்பட்ட தலைவலி போன்ற சிறிய அளவிலான பக்க விளைவுகள் பாரசிட்டாமல் மருந்து மூலம் சரி செய்யப்பட்டது. இரண்டாவது டோஸ்கள் கொடுக்கப்பட்டதும் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளின் திறன் குறையத் தொடங்கியது. SARS-CoV-2 ஸ்பைக் புரதத்திற்கு எதிரான ஆன்டிபாடி சார்ந்த செயல்பாடுகள் மருந்து கொடுக்கப்பட்டு 28 நாட்களுக்கு பிறகும், செல்கள் வழி செயல்பாடுகள் 14 நாட்களுக்கு பிறகும் தூண்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. இதில் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட அனைவருக்கும் ஆன்டிபாடி செயல்பாடு தூண்டப்பட்டன. கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களும் முடிவுகளும் இந்த தடுப்பு மருந்து ஒரு பாதுகாப்பானது மற்றும் திறன்மிக்கது என்பதை உறுதிப்படுக்கிறது. அதிக அளவு பாதிக்கப்படும் அபாயமுள்ள வயதானவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செயல்படும் விதத்தைப் பற்றி மேலும் மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

ஒப்பீட்டு தடுப்பு மருந்து ( Licensed meningococcal conjugate vaccine) அல்லது போலி மருந்து கொடுக்கப்பட்ட ஒப்பீட்டு கட்டுப்பாட்டு குழுவைக் கொண்ட  முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளை இங்கிலாந்தில் ஆரோக்கியமான தன்னார்வலர்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ChAdOx1 nCoV-19 தடுப்பு மருந்தின் 5 × 10¹⁰ வைரஸ் துகள்களை ஒரே டோஸில் அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வுக்கு ஆரோக்கியமான 18–55 வயது வரை உள்ள தன்னார்வலர்கள்  ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் நோயாளிகளைக் கொண்டு தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் ஒப்பிடப்பட்டன. பத்து பேருக்கு மட்டும், முதல் டோஸ் அளிக்கப்பட்டு 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு 28  நாட்களுக்கும், 28  நாட்களுக்கு பிறகும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. ஏற்படும் பக்க விளைவுகள் முறையாக கண்காணிக்கப்பட்டன. சோதனைகளின்போது பெறப்பட்ட முடிவுகள் அரசின் இணையப் பக்கத்தில் அவப்போது பதிவேற்றப்பட்டது.

ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியில் இருந்து மே மாதம் 21 ஆம் தேதி வரை 1077 பேர் இந்த தடுப்பு மருந்து ChAdOx1 nCoV-19 –இன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த முடிவுகளின்படி, தடுப்பு மருந்து அளிக்கப்பட்டவர்களில், தடுப்பு மருந்து கொடுக்கப்படாதவர்களை விட  28 நாட்களுக்கு பிறகு ஆன்டிபாடி செயல்பாடு துவங்கியது. ஆரோக்கியமானவர்கள் மற்றும் நோய் பாதிப்பு கொண்டவர்களின் உடலில் காணப்பட்ட அதே அளவிலான ஆன்டிபாடி செயல்பாடு, நோய் பாதிப்பு இல்லாத ஆனால் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட ஆரோக்கியமானவர்களின் உடலிலும் கண்டறியப்பட்டது. முதல் டோஸ் மட்டும் அளிக்கப்பட்டவர்களில் சுமார் 70% பேருக்கு திறன் மிக்க ஆன்டிபாடி செயல்பாடு தூண்டப்பட்டது. T-செல்கள் மூலம் செயல்படுத்தப்படும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் சுமார் 14 நாட்களுக்கு பிறகு தூண்டப்பட்டது. நோயெதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் தூண்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதைப்பற்றிய மேலும் ஆய்வுகள் மூன்றாம் கட்ட ஆய்வில் மேற்கொள்ளப்படவுள்ளன. இரண்டாவது டோஸ்கள் கொடுக்கப்பட்ட பத்து பேருக்குமே நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகள் மற்றும் T-செல் வழி செயல்பாடுகள் தூண்டப்பட்டிருந்தது. ஆனால் கிடைத்திருக்கும் முடிவுகளின்படி, ஒரே டோஸ் தடுப்பு மருந்து போதுமானது மற்றும் அபாயத்தில் உள்ள வயதில் பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ளது எனத் தெரிய வருகிறது.
THANK YOU:
The Lancet
Prof. Andrew J Pollard et all
The Jenner Institute
Oxford University