சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 34ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேயா வெற்றிப்பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

kohli

ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா 59 ரன்களையும், மார்ச் 54 ரன்களையும், பீடர் ஹேன்ஸ்கம்ப் 73 ரன்களையும், மார்கஸ் 47 ரன்களும் எடுத்தனர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து 289ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஷிகர் தவான் ரன் எடுக்காமலும், விராட் கோலி 3 ரன்களிலும், அம்பத்தி ராயுடு ஒரு ரன் கூட எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். எனினும் ரோஹித் சர்மா தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக தோனி நின்று விக்கெட் இழப்பை தடுத்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

இந்த போட்டியில் தோனி ஒருநாள் போட்டிகளில் தனது 68வது அரை சதத்தை கடந்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 133 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9விக்கெட்டுகளை இந்து 254 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் இந்திய அணியை 34 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் தோனியை தவிர்த்து பிற வீரர்கள் செயல்படாததால் இந்திய அணி தோல்வியை தழுவியதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.