முதல் டி20 போட்டி: 4 ரன்கள் வித்யாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!

முதல் டி20 போட்டியில் இந்தியாவை 4 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் மோதும் முதல் டி20 தொடா் இன்று தொடங்கியது.

12

பிரிஸ்பைன் நகரில் நடந்த முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இடையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை குவித்தனர்.

இதனால், இந்திய அணிக்கு டக்வொர்த் லூவிஸ் முறையில் 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக தவான் 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.