சென்னை:

சென்னை ஐடி காரிடார் சாலையில் 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் டிராக் அமைக்கப்பட உள்ளதாக தமிழக உள்ளாட்சித்துறை  அமைச்சர் வேலுமணி சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது,

சைக்கிள் ஓட்டுபவர்கள் உற்சாகப்படுத்தும் நோக்கில், ஐடி காரிடார் சாலையான ஓஎம்ஆர் சாலையில், அடையாறு கஸ்தூரிபாய்   நகர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் முதல் திருவன்மியூர் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையில் பக்கிங்ஹாம் கால்வாயில் (பழைய மகாபலிபுரம் சாலை) 2.1 கி.மீ தூரத்துக்கு சைக்கிள் டிராக் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், சென்னையில், 35 பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ரூ .25 கோடிக்கு வரவிருப்பதால் மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கும் என்று கூறியவர்,  தற்போது 99 போக்குவரத்து தீவு பூங்காக்கள் மற்றும் 163 சாலை ஓர பூங்காக்கள் தவிர 632 பூங்காக்களைகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்  பராமரித்து வருவதாகவும், மேலும் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக கார்ப்பரேஷன் அதிகாரிகள், குடிமை அமைப்பிற்கு சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களாக மாற்றுவார்கள் என்றும்  அமைச்சர் கூறினார்.

மாநிலத்தில் பசுமையை அதிகரிக்கும் வகையில், வரும் ஆண்டில் 50,000 மரக்கன்றுகளை ரூ .15 கோடியில் நடவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 23,000 மரக்கன்றுகளை ரூ .5.29 கோடியில் நடவு செய்ய முன்மொழியப்பட்டது.  அதில், 20,800 மரக்கன்றுகள் நடவு முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ளவை சரியான நேரத்தில் நடப்படும் என்றும்  தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொது-தனியார் கூட்டு மாதிரியின் கீழ் ரூ .200 கோடியில் ஒரு பொதுவான ஆப்டிகல் ஃபைபர் நடைபாதை அமைக்கப்படும், தெரு விளக்குகளை கண்காணிக்க தொலைநிலை குழு கண்காணிப்பு அமைப்பு ரூ .46.2 கோடியில் அமைக்கப்படும். தற்போது, ​​ நகரம் முழுவதும் கிட்டத்தட்ட 2.85 லட்சம் எல்.ஈ.டி தெரு விளக்குகள் உள்ளன.

மேலும், . தரிசு நிலத்தில் 2,000 இடங்களில் புதிய மழை நீர் அறுவடை முறைகளை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ள குடிமை அமைப்பு, மகத்தான பணிக்காக ரூ .12.5 கோடியை அனுமதித்துள்ளது, மேலும் 114 நீர்நிலைகளை புத்துயிர் பெற ரூ .100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்கள், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தியதாலும், இயற்கை இடர்பாடுகளாலும் சேதமடைந்த சாலைகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

பம்மல் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.211.15 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப் படும். பேரூராட்சிப் பகுதிகளில் 360 கி.மீ. நீளமுள்ள பல்வேறு வகையான சாலைகள் ரூ.200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள 6 ஆற்றுப் படுகைகளில் கலப்பதைத் தவிர்க்க 30 பேரூராட்சிகளில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

பேரூராட்சிகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலை புனரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மேலும் 50 நீர்நிலைகள் ரூ.24.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

தொண்டாமுத்தூர், வெள்ளலூர், காரமடை உள்ளிட்ட 18 பேரூராட்சிகளில் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். பாலக்கோடு, சிவகிரி, செஞ்சி, தாத்தையங்கார்பேட்டை, சின்னாளப்பட்டி ஆகிய 5 பேரூராட்சிகளில் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் ஆதாரங்கள் மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தில் பழுதடைந்த பணிகள் ரூ.26.17 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தைச் சார்ந்த 134 ஊரகக் குடியிருப்புகளிலுள்ள 76 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.98 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

திருப்பூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 165 ஊரகக் குடியிருப்புகளின் 60 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.71 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் எஸ்.பி.வேலுமணி.

சென்னை மாநகருக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள 114 நீர்நிலைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

சென்னை நகரில் கண்ணாடி இழை உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்புத் திட்டமாக பொது – தனியார் கூட்டமைப்பு முறையில் கீழ்நிலை பெட்டகம் அமைக்கும் பணி ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக 35 பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி நிலங்களில் அமைக்கப்படும்.  சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் தெரு விளக்குகளை தொலைதூரத்திலிருந்து கண்காணிக்கும் முறை ரூ.46.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மாம்பலம் கால்வாயை எழிலூட்டும் பொருட்டு ரூ.80 கோடி செலவில் அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

சென்னையில் பெருங்குடி உள்ளிட்ட 15 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ரூ.1,028 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில், விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட 14 பகுதிகளுக்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்க, ரூ.4,034 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயலாக்கப்பட்டு வருகிறது.

கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களை சுத்திகரிப்பு செய்து, அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும், கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை அமைப்பதற்குமான திட்டத்தை, அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில், ரூ.3,539 கோடி மூலதன மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு, முதல்-அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் 11 நகரங்களில், கடந்த 2015-2016-ம் ஆண்டு முதல் ரூ.11,296 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில், 327 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், இத்திட்டத்திற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில், 2016-2017 மற்றும் 2017-2018-ம் ஆண்டில், ரூ.840 கோடி மதிப்பீட்டில், 40 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2018-2019-ம் ஆண்டில், ரூ.420 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆண்டில் ரூ.420 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்பட உள்ளன.

அ.தி.மு.க. அரசு 2018-19-ம் ஆண்டில், ரூ.252 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து, 1 லட்சம் மகளிருக்கு, அம்மா இருசக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது.

இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1,12,972 மகளிருக்கு, இருசக்கர வாகனம் வாங்க, மானியமாக, ரூ.256 கோடியே 59 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.