மதுரை:

ந்தியாவில் உள்ள இந்து மதத்தினரை மதம் மாற்றும் செயலில் சுமார் 2.25 லட்சம் முழுநேர கிறிஸ்துவ ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக  விசுவ இந்து பரிஷத் தலைவர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே கூறி உள்ளார்.

மதுரையில் நடைபெற்று வரும் வைகைப் பெருவிழா ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஸ்வ ஹிந்து பரிஷத் உலக பொது அமைப்பு பொதுச் செயலர்  விநாயக் ராவ் தேஷ்பாண்டே பேசும்போது,  கோயில்களுக்குச் செல்வோர் ஜாதி வேறுபாடுகளை மறந்து பக்தன் என்ற அடிப்படை யில் தரிசனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும்,  ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருவள்ளுவர் போன்ற ஆன்றோர் ஜாதி வேறுபாடுகளை களைய முயற்சி எடுத்து வந்தனர். அவ்வழியை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று கூறியவர், கோயில்களில் அனைத்து ஜாதியினரும் பூஜைகள் செய்ய வேண்டும் என காந்தியடிகள் முயற்சி எடுத்தார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,.  இந்தியாவில் மதமாற்றம் எனும் மோசடி நடந்து வருகிறது. அது தனக்கு  வேதனை தருகிறது என்று கூறியவர், நாட்டில் உள்ள இந்து மக்களை மதம் மாற்றுவதற்காக சுமார்  இரண்டு லட்சத்து 25 ஆயிரம்  முழு நேர ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றும், இதற்காக சில நாடுகள் பணத்தை வாரி இறைக்கின்றன,  மதம் மாற்றும் பணிக்கு  மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் கூறினார்.