இரண்டே நாளில் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்பு! தமிழகஅரசு

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில்,  வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரும், அடுத்த மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  தளர்வு இ-பாஸ்-க்கு மட்டுமே, மனிதர்களுக்கு அல்ல என்று  சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.  இ-பாஸ் பெற்று சென்னை வருபவர்கள், கண்டிப்பாக வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, முதல் நாளில் 1.4 லட்சம் இ.பாஸும், 2-வது நாளில் 1.3 லட்சம் இ.பாஸ் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலிலும், திங்கட்கிழமை (17ந்தேதி) 14,355 பேருக்கு இ-பாஸ் வழங்கி இருப்பதாகவும்,  அவர்களில் , 11,608 பேர் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து திரும்பி வந்தவர்கள். இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த வாரம் வரை இ-பாஸ் விதிமுறைகள் கடுமையாக இருந்தபோது, ​​தினசரி 5,000 பேர் மட்டுமே சென்னைக்கு வந்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.