அம்பத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்

சென்னை: சென்னை அம்பத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பத்தூர் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ள அலெக்சாண்டர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக திமுகவின் ஜோசப் சாமுவேல் என்பவர் போட்டியிடுகிறார். இந் நிலையில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க எண்ணி, 89வது வார்டில் டோக்கன் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் பணம் வினியோகிக்க முடியாத நிலை எழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அதிமுகவை சேர்ந்த வெங்கடேசன், தாமோதரன் ஆகிய இருவரும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு தலா ரூ.500 பணம் வினியோகம் செய்துள்ளனர்.

தகவலறிந்த திமுகவினர், இருவரையும் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பைக் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.