சென்னை

சென்னை வேளச்சேரி மற்றும் தேனாம்பேட்டையில் அமைந்துள்ள  இரு அடுக்குமாடி குடியிருப்புக்கள் மழை நீர் சேகரிப்பால் முழுப்பயன் அடைந்துள்ளன.

சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. பெரும்பாலான குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மட்டும் முழுவதுமாக குறைந்துள்ளது. அங்கு வசிக்கும்  மக்கள் லாரியில் வரும் தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகித்து வருகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைவதைத் தடுக்க அரசு மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது. மக்களுக்கு இந்த திட்டத்தைச் சிறப்பாகச் செய்ய மாநகராட்சி ஆலோசனை வழங்கி வருகிறது.

அவ்வகையில் சென்னை வேளச்சேரி மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள இரு  குடியிருப்புக்களில் மழைநீர் சேகரிப்பு கிணறு அமைக்க அளித்த ஆலோசனையின்படி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிணறுகளில் சேமிக்கப்படும் மழை நீர் நிலத்தில் உள்ள மண் மூலம் உறிஞ்சப்படுகிறது. இந்த நீர் சுமார் ஒரு வாரம் வரை உள்ளேயே இருக்கின்றது. கிணற்றின் அடியில் களிமண் பரப்பு இருப்பதால் நீர் இன்னும் கீழே செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே சேமிக்கப்படும் மழை நீர் நிலத்தில் உறிஞ்சப்பட்டு அதன் பிறக் சிறிது சிறிதாக இந்த கிணற்றில் சேர்கிறது. நீர் சேரச் சேர குடியிருப்போர் அதை எடுத்துப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவ்வாறு இந்த குடியிருப்பு வாசிகள் 5 மணி நேரத்துக்கு ஒருமுறை வரும் நீரை மேலே உள்ள தொட்டிகளுக்கு ஏற்றிக் கொள்கின்றனர். இந்த கிணறுகள் 3 அடி விட்டமும் 15 அடி ஆழமும்கொண்ட்வைகளாக உள்ளன. இரு இடங்களிலும் தலா 140க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பலனடைந்து வருகின்றனர்.

இந்த கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர்  ஆழ்குழாய் கிணற்றுத் தண்ணீரை விட சுத்தமாக உள்ளதாகச் சோதனைகள் தெரிவிக்கின்றன. ஆழ்குழாய் கிணற்றில் தாது உப்புக்களின் அளவு 1400 மிகி ஆக இருக்கிறது. ஆனால் இந்த மழைநீர் சேகரிப்பு கிணற்று நீரில் அது 400 மிகி ஆக உள்ளது. எனவே இந்த குடியிருப்பு வாசிகள் 18 அடி ஆழம் கொண்ட மேலும் இரு கிணறுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.