ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து வங்கி ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது

குண்டூர்: ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து, வங்கி ஏடிஎம்மில் 77 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாட்சேப்பள்ளியில் உள்ள வங்கி ஒன்றின் கீழ் தளத்தில் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 21ம் தேதி சிசிடிவி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டி எடுத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய போலிசார் தெலுங்கானாவை சேர்ந்த பிரசாத், வினய்ராமுலுவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 77 லட்சம் ரூபாயும் மீட்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குண்டூர் புறநகர் மாவட்ட எஸ்பி விஷால் குன்னி, 2 பேரும் சிசிடிவி இணைப்புகளை துண்டித்தும், மிளகாய் பொடி தூவியும் கொள்ளை அடித்துள்ளனர். ஆனாலும் தடயவியல் தொழில்நுட்ப உதவியுடன் கைது செய்யப்பட்டு பணம் மீட்கப்பட்டுள்ளது என்றார்.