ராஜஸ்தான் : ஆட்டோ ஓட்டுநரை ஜெய்ஸ்ரீராம் சொல்ல மிரட்டித் தாக்கிய இருவர் கைது

சிகார்

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் ஒரு ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி மிரட்டி ஜெய்ஸ்ரீராம் மற்றும் மோடி வாழ்க எனச் சொல்ல வற்புறுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் 52 வயதான கஃபார் அகமது என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.  இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிகார் நகரில் உள்ள கல்யாண் சர்க்கிளில் இருந்து ஜிகிரி சோட்டி பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளார்.   அப்போது அவரை ஒரு சிலர் சுற்றி வளைத்துள்ளனர்.

இது குறித்து கஃபார் அகமது, “அவர்களில் ஒருவர் மோடி வாழ்க எனக் கூறச் சொன்னார்.  நான் மறுத்ததால் என்னை அவர் தாக்கினார்.  அதே வேளையில் மற்றொருவர் என்னை ஜெய்ஸ்ரீராம் என கூறச் சொன்னார். நான் அங்கிருந்து எனது ஆட்டோவில் தப்பித்துச் செல்ல முயன்றேன்.  ஆனால் என்னைத் தடுத்து அந்த தெருவிலிருந்த ஒரு கோதுமை கிடங்கு முன்பு நிறுத்தி என்னை அடித்து நான மயங்கி விட்டேன்.

எனக்கு தலை, மணிகட்டு உள்ளிட்ட இடங்களில் காயம் பட்டுள்ளது.  அவர்கள் என்னை தங்கள் முட்டியால் குத்தி காலால் உதைத்துத் தாக்கினர்.  அவர்கள் என்னை விட்டுச் சென்றதும் நான் மயக்கம் தெளிந்து சிகார் நகரக் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்தேன்.  அதன் பிறகு அங்கிருந்தோர் உதவியுடன் நான் காவல்நிலையம் சென்று புகார் அளித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் இது குறித்து ராஜேந்திரா மற்றும் சம்பு தயாள் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் முறையே ஜக்தல்பூர் மற்றும் ஜிக்ரி சோட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   இருவர் மீதும் ஏற்கனவே தாக்குதல், திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கைதானவர்களிடம் காவல்துறை மேலும் விசாரணை செய்து வருகிறது.