சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு மத்தியில் அவுரங்காபாத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. பீகாரில் பரபரப்பு…

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அவுரங்காபாத் பகுதியில்  2 வெடிகுண்டுகள் கண்டெடுக் கப்பட்டுஉள்ளது. இதனால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில்,  இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக இன்று பீகார் மாநிலத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று முதல்கட்டமாக 16 மாவட்டங்களில் அடங்கியுள்ள 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  பீகாரில் மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றிய  மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்),  வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் செயலிழக்க வைத்தனர்.  அதையடுத்து அங்கு மேலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அந்த பகுதியில்  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில்  ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 42 பேர், ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியைச் சேர்ந்த 35 பேர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் 29 பேர், காங்கிரசில் இருந்து 21 பேர், இடதுசாரிகளை சேர்ந்தவர்கள் 8 பேர் உட்பட 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.