இந்திய பயணம்… ஏலக்காரராக மாறிய டிரம்ப்

மெரிக்க அதிபர் டிரம்ப் திங்கள்கிழமை இந்தியா வருகிறார். அமெரிக்காவில் இருந்து நேராக ராணுவ விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வந்திறங்குகிறார்.

காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்துக்கு அவர் செல்வதாக இருந்தது. அதற்கு பதிலாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க செல்வதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

அகமதாபாத்தின் மொடேராவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை ட்ரம்பும், பிரதமர் மோடியும் திறந்து வைப்பதாக இருந்தது. அதுவும் ரத்து. அந்த ஸ்டேடியத்தில் ‘ நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் மட்டுமே அவர் பங்கேற்கிறார்.
நேற்று வரைக்கும் ட்ரம்ப் குடும்பத்தில் இருந்து, டிரம்புடன் அவர் மனைவி மெலனியா மட்டுமே வருவதாக இருந்தது.
இப்போது டிரம்புடன் அவர் மகள் இவாங்காவும், அவர் கணவர் அதாவது அதிபரின் மருமகன் குஷ்னரும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் ’நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் டிரம்ப் தம்பதியருடன் பங்கேற்கும் இவங்காவும், குஷ்னரும் பின்னர் தாஜ்மஹாலுக்கும் செல்ல உள்ளனர்.

இவாங்காவும், குஷ்னரும் ட்ரம்பின் குடும்ப உறுப்பினர்கள் என்ற எல்லையை தாண்டி அவரது ஆலோசகர்களாகவும் உள்ளனர். அதாவது அமெரிக்க அரசின் அதிகாரிகள்.

டிரம்புக்கு இந்தியா புதிதாக இருக்கலாம். ஆனால் இவாங்காவுக்கும், குஷ்னருக்கும் புதிதல்ல.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இவாங்கா வந்துள்ளார்.
குஷ்னர், தனது ஹார்வர்ட் பல்கலைகழக மாணவ நண்பரான நிதின் திருமணத்தில் கலந்து கொள்ள 2018 ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார்.

பயணத்திட்டத்தில் மாறுதல் ஒரு புறம் இருக்க, அகமதாபாத்தில் தன்னை வரவேற்க காத்திருக்கும் மக்கள் எண்ணிக்கையை டிரம்ப் அதிகரித்து கொண்டே செல்வது, இந்திய தரப்புக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘அகமதாபாத்தில் என்னை வரவேற்க 7  மில்லியின் (70 லட்சம்) மக்கள் கூடுவார்கள் என்று மோடி என்னிடம் சொன்னார்’’ என இதுவரை தெரிவித்து வந்த டிரம்ப். அந்த எண்ணிக்கையை ஏலம் விடுவது போல் அதிகரித்துகொண்டே செல்கிறார்.

நேற்று கொலோராடாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப்’’ இந்தியாவில் எனக்கு பிரமாண்ட வரவேற்பு காத்திருக்கிறது. தனக்கு

டென் மில்லியன் (ஒரு கோடி) பேர் அகமதாபாத்) சாலையின் இருபுறமும் நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர்’’ என்று நம் ஊர் அரசியல்வாதிகள் போல் சொல்லி குதூகலித்தார்.

அடுத்து ஒன்றரை கோடி பேர் என்று சொல்லப்போகிறாரோ இல்லை நாலு கோடி பேர் வரவேற்க காத்திருக்கிறார்கள் என்று சொல்லப்போகிறாரோ டிரம்ப்பு. மொத்தத்தில் டிரம்ப் பேசப்பேச மோடி, அமித் ஷாவுக்கு ரத்த அழுத்தம் ஏறிவிடும் போலிருக்கிறது.

-ஏழுமலை வெங்கடேசன்