Random image

புதிய கார்களை திருடி பாதி விலைக்கு விற்ற கார் கம்பெனி ஊழியர்கள்: அதிரடி கைது

சென்னை:

பிரபலமான கார் நிறுவனமான ரெனால்ட் கார்  ஆலையில் புதிய கார்களை நூதன முறையில் திருடி பாதி விலைக்கு விற்ற ஊழியர்கள்  2 பேர் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரகடம் பகுதியில், ரெனால்ட்-நிஸான் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இங்கு ரெனால்ட் நிறுவனத்தின் பல்வேறு வகையான கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் இருந்து புதிதாக தயாரிக்க 2 ரெனால்ட் டஸ்ட்டர்  கார்கள் கடந்த ஜனவரி 22ம் தேதி திருடு போனது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கண்காணிப்புகள் உள்ள நிலையில் கார் திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரெனால்ட்-நிஸான் கார் தொழிற்சாலை உயரதிகாரிகள் சார்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் தற்போது காரை திருடி விற்றதாக அங்கு பணி செய்து வரும் ஊழி யர்கள் 2 பேரை கைதுசெய்தனர். அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் மாரிமுத்து (28 வயது), அருண் குமார் (27 வயது) ஆகிய 2 ஊழியர்கள்தான், விலை உயர்ந்த 2 டஸ்ட்டர் கார்களை நூதன முறையில் திருடி சென்று பாதிவிலையில் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், திருடப்பட்ட கார்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பட்ட   ரெனால்ட் டஸ்ட்டர் கார்களின் மதிப்பு சுமார் 25 லட்ச ரூபாய்.  இந்தியாவில் விற்பனையாகும் பிரபலமான எஸ்யூவி வகை கார்களில் ஒன்றுதான் ரெனால்ட் டஸ்ட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.