டில்லி

பிரதமர் மோடியின் ஒட்டு வேலைகளால் பொருளாதார பின்னடைவு சரியாகாது என விமர்சித்த பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருவர் நீக்கப்பட்டுள்ளனர்

இந்தியப் பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு என்பது ஒரு தன்னுரிமை பெற்ற துறை ஆகும்.  இந்தக் குழு உறுப்பினர்கள் அரசுக்கு குறிப்பாக பிரதமருக்குப் பொருளாதாரம் தொடர்பான பல விவகாரங்கள் குறித்த நடவடிக்கை எடுக்க ஆலோசனை அளிப்பது வழக்கமாகும்.   அது மட்டுமின்றி தவறான நடவடிக்கை எடுக்கும்போது அது குறித்த விமர்சாங்களையும் இவர்கள் அளித்து வருவார்கள்.

இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஷமிகா ரவி மற்றும் ரத்தின் ராய் ஆகிய இருவரும் நேற்று முன் தினம் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ரத்தின் ராய் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வியகத்தின் இயக்குநரும் ஆவார்.  அத்துடன் அவர் பொருளாதாரம் குறித்த பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதி வருகிறார்.  ராய் கடந்த 2018-19 ஆம் வருடத்துக்கான வரி வருமான திருத்தப்பட்ட கணக்குகள் தவறானவை என்பது குறித்து அரசை விமர்சித்துள்ளார்.

இதன் மூலம் சரியான அளவு வரி வருமானம் கிடைக்காததால் நாட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.  அத்துடன் அரசின் வெளிநாட்டுத் தங்கப் பத்திர திட்டம் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

நீக்கப்பட்ட மற்றொரு ஆலோசகரான ஷமிகா ரவி தனது டிவிட்டரில், “தற்போது இந்தியா பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. அதைச் சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து, தேசிய வளரச்சித் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தைச் சீர்படுத்தப் பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படுமே தவிர வெறும் ஒட்டுவேலைகள் பயன் அளிக்காது.

பொருளாதார வீழ்ச்சியை நிதியமைச்சகத்திடம் மட்டும் விட்டுவிடுவது, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியையும் கணக்குகள் துறையிடம் ஒப்படைப்பது போன்றதாகும்”எனபதிந்திருந்தார்.  அத்துடன் மின் சிகரெட்டுகள் தடையையும் அவர் விமர்சித்துள்ளார்.  எல்லா சிகரெட்டுகளிலும் புகையிலை உள போது மின் சிகரெட்டுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இவர்கள் இருவரும் நீக்கம் செய்யப்பட்டது குறித்து ”மோடி அரசின் தவறான கொள்கையால் விளைந்த பொருளாதார மந்த நிலையைச் சுட்டிக்காட்டும் அதிகாரிகள், உறுப்பினர்கள் தொடர்ந்து நீக்கப்படுகின்றனர். இதன் மூலம் அரசு சிறப்பாகச் செயல்படமுடியாது” எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.