முக்கொம்பு : பாதுகாப்புக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டனர்.

திருச்சி

திருச்சி முக்கொம்பு மேலணை கட்டுமான பணி பாதுகாப்புக்கு வந்த இரு தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பின் மீட்கப்பட்டுள்ளனர்.

திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்தன.  அவற்றை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.   இந்த சீரமப்புப் பணிகள் காலை மாலை என இரு ஷிப்டாக நடக்கிறது.   ஒவ்வொரு ஷிப்டிலும் தலா 400 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

தற்போது அணைப்பகுதியில் வெள்ளம் உள்ளதால் பாதுகாப்பு பணிக்காக தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.  இன்று காலை கட்டுமான பொருட்களை பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.  அவர்களுடன் 2 தீயணைப்பு வீரர்கள் அந்த படகில் உடன் சென்றுள்ளனர்.

ஆற்றின் நடுவில் செல்லும் போது திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்துள்ளது.   அதில் பயணம் செய்த இரு தீயணிப்பு வீரர்களும் வெள்ளத்தில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.   அதைக் கண்ட மற்ற தீயணைப்பு வீரர்கள் கயிறுகள் மூலம் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் பத்திரமாக மீட்டனர்.