ஸ்ரீநகர்

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் பிராட்பாண்ட்   2 ஜி இணையச் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது.   அதன் பிறகு அங்கு கடும் பரபரப்பு நிலவி வருவதால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளது.   அந்த கட்டுப்பாடுகளில் ஒன்றாக மொபைல் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.    முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட  பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.   இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் இணையச் சேவை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரம் இணையச் சேவை முடக்கத்தால் பாதிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று முதல் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பிராட்பாண்ட் இணைய தள சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் இந்த சேவை மாநிலம் முழுமைக்கும் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் மருத்துவமனைகள், டிராவல்ஸ் நிறுவனங்கள், தீயணைப்புத் துறை, வங்கிகள், காவல்துறை ஆகியோர் மட்டுமே உபயோகிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இணையச் சேவை குறைந்த வேகமான 2 ஜி வேகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.   இதில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாது.   இவ்வாறு இணைய தள சேவை அனுமதிக்கப்பட்ட போதிலும் பொது மக்களால் இணையச் சேவையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.