டில்லி

சிபிஐ நீதிமன்றம் வழங்கிய 2 ஜி தீர்ப்பை ஒட்டி ஏற்கனவே உரிமம் ரத்து செய்யப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசு மீது இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளன.

கடந்த 2008 ஆம் வருடம் மத்திய அரசால் அ ராஜா பொறுப்பேற்றிருந்த தொலைதொடர்புத் துறை 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழங்கியதில் முறைகேடு நடைபெற்று சுமார் 1,76,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறி சிபிஐ வழக்கு தொடர்ந்தது.   அதையொட்டி கடந்த 2012ஆம் வருடம் உச்ச நீதிமன்றம் 122 தொலைதொடர்பு நிறுவன உரிமங்களை ரத்து செய்தது.

தற்போது 2 ஜி வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக நிரூபிக்கப் படவில்லை எனக் கூறி ராஜா மற்றும் கனிமொழி உட்பட அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளனர்.   இந்நிலையில் உரிமம் ரத்து செய்யப்பட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசிடம் இழப்பீடு கோரி வழக்கு பதிவு செய்துள்ளன.

அவற்றில் வீடியோகோன் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனம் முறையே சுமார் ரூ. 10000 கோடி மற்றும் ரூ.4000 கோடி இழப்பீடு கேட்டுள்ளன.   எஸ் டெல் நிறுவனம் சார்பில் சிவசங்கரன் ரூ. 3400 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.  சிவசங்கரனின் நிறுவனத்தின் ஆறு உரிமங்கள் உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2012ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.

வீடியோகோன் நிறுவனம் தனது இந்த தொலைதொடர்பு வர்த்தகத்துக்காக ரூ. 25000 கோடி கடன் வாங்கியதாகவும் அதன் 21 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.   மேலும்  இந்த இழப்பை தாங்க முடியாமல் தனது ரத்து செய்யப்படாத உரிமங்களை பாரதி ஏர்டெல் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் விற்றதாகவும்  தங்கள் மேல் தவறில்லாமலே நிறுவனம் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதே போல லூப் டெலிகாம் நிறுவனமும் தனது குற்றம் ஏதும் இல்லாமல் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் தங்கள் நிறுவனம் அடைந்த நஷ்டத்துக்கு இழப்பீடு தேவை எனக் கூறி உள்ளது.   நுழைவுக் கட்டணமாக ரூ.1454 கோடி,  மற்றும் வட்டியாக ரூ.738 கோடி,  இழப்பீடாக ரூ. 1000 கோடி மற்றும் சேவையை நிறுத்தியதால் ஏற்பட்ட செலவுத் தொகை ரூ. 830 கோடி என பட்டியல் இட்டு இழப்பீடு கேட்டுள்ளது.   மொத்தம் ரூ. 4000 கோடி இழப்பீடு தேவை என அந்நிறுவனம் கேட்டுள்ளது.

சிவசங்கரன் தனக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்காக உச்சநீதிமன்றத்தை அணுகவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.   தனக்கு ஏற்பட்டுள்ள ரூ.3400 கோடி இழப்பை அரசு திரும்ப அளித்தாக வேண்டும் எனவும், தாம் எதுவும் தவறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பது தற்போதைய நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உற்திப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.