சென்னை:

மிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,  சென்னையில் தலா 730 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு எரிவாயு சுழலி மின் நிலையங்கள், சுமார்  5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படும் என்றும் கூறினார்.

பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித்துறை, எரிசக்தித் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,  பள்ளிக் கட்டிடங்கள் கழிப்பறைகள் கட்டுதல் மற்றும் பழுது பார்த்தல் பணிகள்  156 பள்ளிகளில் 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 61 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

2,650 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்துத் தரப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக, 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் 10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

மேலும்,

சென்னையில் தலா 730 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் நிலையங்கள், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். முதற்கட்டமாக, இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

தற்பொழுது இயக்கத்தில் உள்ள ஐந்து அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் தூசுகள் காற்றில் கலப்பதைக் கட்டுப்படுத்த, 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உபகரணங்கள் நிறுவப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள 250 உதவி பொறியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். வட சென்னை அனல் மின் நிலையம் நிலையத்திற்காக 150 உதவி பொறியாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

தமிழ்நாடு எரிசக்தி முகமைக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சொந்த கட்டடம் கட்டப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், நாமக்கல் மாவட்டம் நல்லூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஆகிய  3 இடங்களில்  230 கி.வோ. புதிய துணை மின் நிலையங்கள்  510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்தார்.