மிஸோரி: உத்ரகாண்ட் மாநிலம் மிஸோரியில் கொரோனா வைரஸ் தொற்றியிருந்த 2 முடிதிருத்துனர்கள், 140 வாடிக்கையாளர்களுக்கு பணி செய்திருந்தும், அவர்களில் ஒருவர்கூட கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை எனும் ஆச்சர்ய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மிஸோரியின் ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் கிரேட் கிளிப்ஸில், மேற்கண்ட அந்த 2 முடிதிருத்துனர்களும் பணிபுரிகிறார்கள். ஆனால், அந்த முடிதிருத்தகத்தில் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாக அப்பகுதியின் கவுன்ட்டி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

முடிதிருத்துனர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகிய இருதரப்பினரும் முகக் கவசம் அணிந்திருந்தனர் என்றும், அங்குள்ள நாற்காலி உள்ளிட்டவைகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தன என்றும், வாடிக்கையாளர்களின் வருகை சீரற்று இருந்தது என்றும் கூறப்படுகிறது.

மொத்தம் 140 வாடிக்கையாளர்கள் மற்றும் 7 துணை-பணியாளர்களில், 46 பேர் பரிசோதனைக்கு உட்பட்டதில், அவர்கள் அனைவருக்கும் நெகடிவ் முடிவுகளே வெளியாகின. மேலும், மற்றவர்கள் 14 நாட்கள் காத்திருப்பில் இருந்து, அதன்பிறகான காலக்கட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. அந்த 2 முடிதிருத்துனர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு.

“முகக் கவசம் அணிவதானது எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இந்த ஆச்சர்ய சம்பவத்தின் மூலம் தெரியவருகிறது” என்றுள்ளார் அந்த கவுன்ட்டியின் சுகாதார இயக்குநர் கிளே கோடார்டு.

“இந்த நிகழ்வு குறித்து நாங்கள் நுட்பமாக ஆராய்ந்து வருகிறோம். என்னமாதிரியான முகக்கவசம் பயன்படுத்தப்பட்டது மற்றும் இதன்பொருட்டு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்று மேலும் தெரிவித்தார் அவர்.