கர்நாடகாவில் பரபரப்பு: குமாரசாமி அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏக்கள்…!

பெங்களூரு:

ன்னும் ஒரு சில மாதங்களில்  நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக தனது பரமபத ஆட்டத்தை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதனால், ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று கர்நாடக துணைமுதல்வர் பரமேஸ்வரா தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு (2018) மே மாதம் 12ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற்றது. 224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க  113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கா ததால், பாஜக 104 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னர் ஆதரவுடன்  முயன்றது. ஆனால், உச்சநீதி மன்றம் கொடுத்த மரண அடி காரணமாக, எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் சட்ட மன்றத்தை விட்டு வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜேடிஎஸ் ஆட்சி அமைத்தது.  தற்போது ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ், ஜே.டி.எஸ் எம்எல்ஏக்களுடன் ஒருசில சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன்  கூட்டணியில் 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆசை வார்த்தை கூறி, தங்கள் பக்கம் திருப்ப முயற்சித்து வருகிறது.

தற்போது 104எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு மேலும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால், ஆட்சியை அசைத்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் முதல் கட்டமாக 2 சுயேச்சை எம்எல்ஏக் களை வளைத்து பிடித்துள்ளதாக தெரிகிறது. இதன் எதிரொலியாகத்தான் குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர்.

எப்படியாவது கர்நாடகவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற திட்டத்தை பாஜக கர்நாடகாவில் தொடங்கி  மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் இடையே பிரச்சினைகளை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை வசப்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் சுயேச்சை எம்எல்ஏக்களான எச்.நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் ஆகிய இருவரும் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இது தொடர்பாக கர்நாடக மாநில கவர்னருக்கு அவர்கள் தங்கள ஆதரவை வாபஸ் பெற்ற கடிதத்தை அனுப்பி உள்ளனர்.

இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக துணைமுதல்வர் பரமேஸ்வரா,  பாஜக எங்களது எம்எல்ஏக்களுக்கு பணத்தாசை காட்டி ஏமாற்றி வருகிறது. ஆனால், அரசாங்கத்தை சீர்குலைக்கும் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைகின்றன.

நாங்கள் குதிரை பேரத்திற்கு எதிரானவர்கள். ஆனால், சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்கள் வாபஸ் பெறுவதால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்துக்கும் கிடையாது என்று தெரிவித்தார்.