ஸ்ரீநகர்:

காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படையினர் 2 இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை சிதைத்தது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘காஷ்மீரில் கிருஷ்ணா காதி என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் 2 நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர்.

இத்துடன் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையின் அதிரடி பிரிவு வீரர்கள் 2 நிலைகளுக்கு இடையே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் இறந்த 2 ராணுவ வீரர்களின் உடல்களை சிதைத்துள்ளனர். பாகிஸ்தான் வீரர்களின் இந்த கொடூர செயலுக்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் ரணுவத்தின் மனிதாபிமானமற்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. வீரமரணம் அடைந்த இந்திய ஜவான்களின் தியாகம் வீண் போகாது.

நமது இந்திய படைகள் மீது நம்பிக்கை உள்ளது தக்க பதிலடி கொடுப்பார்கள்’’ என்றார். இதற்கிடையில் இந்தியா ராணுவ தலைமை தளபதி பிபின்ராவத் காஷ்மீர் சென்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.