டெல்லி: போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவரம் வெளியாகி உள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் வன்முறை மூண்டது.

போராட்டக்காரர்களை போலிசார் தடியடி கொண்டு விரட்டினர். மேலும் துப்பாக்கியால் சுட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை என்று டெல்லி போலிசார் மறுப்பு தெரிவித்தனர்.

இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 2 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் யார், பெயர் போன்ற விவரங்கள் தெரியப்படுத்தப்படவில்லை. அது தொடர்பான வீடியோக்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் துப்பாக்கியால் சுடவில்லை என்று டெல்லி போலிசார் மறுத்துள்ளனர்.

இது குறித்து டெல்லி போலிஸ் செய்தி தொடர்பாளர் ரன்த்வா கூறுகையில், போராட்டத்தின் போது எந்த துப்பாக்கிச்சூடும் நடக்கவில்லை, எந்த உயிரிழப்பும் இல்லை என்றார்.