Random image

பத்திரிகையாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை: விடுதலை செய்ய மியான்மருக்கு ஐ.நா. வலியுறுத்தல்

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் குறித்த தகவல் சேகரித்தாக குற்றம் சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட  2 பத்திரிகையாளர்களுக்கு மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் அமைப்புகள் மியான்மர் நாட்டுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மியான்மர் அரசுக்கு  ஐ.நா.சபை வலியுறுத்தி உள்ளது.

மியான்மரில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சினை காரணமாக அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள், நாட்டில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இது மியான்மர் நாட்டின்  இனஅழிப்பு என்று குற்றம் சாட்டப்பட்டது. சுமார் 700,000 ரோஹிங்கியா  அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  இந்த பிரச்சினை பூதாகாரமாக எழுந்தது.

அது குறித்து செய்தி சேகரித்த பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் ஊடகத்தை சேர்ந்த 2 பத்திரிகை யாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  கைது செய்யப்பட்டனர்.

மியான்மர் நாட்டின் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட  அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.