சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்துள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது .இதனால் சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழகஅரசின் கோரிக்கையை ஏற்று 3வது கட்டமாக  2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த தடுப்பூசிகள் புனேயில் இருந்து  விமானம் மூலம் சென்னை வந்தது. மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது 2 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி உள்ளது.

தமிழகத்திற்கு முதல்கட்டமாக மத்திய அரசிடமிருந்து 15 லட்சம் தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து,  2வது கட்டமாக ஏப்ரல் 20ந்தேதி 6லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வந்ததது. தற்போது 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.

இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் 20 லட்சம் தடுப்பூசிகள் தேவை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.