வாஷிங்டன்

மெரிக்காவில் வசிக்கும் 2 லட்சம் வெளி நாட்டு இந்தியர்கள் எச்1பி விசா விதிகள் காரணமாக வரும் ஜூன் முதல் அந்நாட்டில் வசிக்க இயலாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் பணிபுரியும்  வெளிநாட்டவருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது.  இந்த விசா விதிகளின்படி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர் பணியில் இருக்கும் வரை அமெரிக்காவில் வசிக்க முடியும்.   அவர்கள் பணி இழக்க நேரிட்டால் 60 நாட்கள் வரை மட்டுமே அமெரிக்காவில் வசிக்க முடியும்.   அதற்குள் வேறு பணியில் சேராவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

அமெரிக்காவில் படுவேகமாக பரவி வரும கொரோனாவின் தாக்கத்தால் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்கின்றன.    அத்துடன் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு அளித்து வீட்டிலேயே இருக்க உத்தரவிட்டுள்ளன.  எச்1பி விசா விதிப்படி  இவ்வாறு ஊதியம் இல்லாமல் இருப்பவரும் பணி இல்லாதவராகவே கருதப்படுவார்கள்.

அது மட்டுமின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்கி உள்ள காப்பீட்டுப் பலன் கிடைக்காது.  மருத்துவமனைகளில் சொந்த செலவில் மட்டுமே சிகிச்சை பெற முடியும்.  கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே அமெரிக்காவில் வேலை இன்மை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது.    வேலை இன்மைக்கான நிவாரணத்துக்காக சுமார் 66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய நிலையில் அமெரிக்கர்கள் உள்ளபோது எச்1பி விசா வைத்துள்ள வெளிநாட்டவர் நிலை மேலும் மோசமானதாகும்.   வெளிநாட்டினர் தற்போதைய சூழலில் அமெரிக்காவில் மற்றொரு பணியைப் பெற முயலும் நிலை சிறிதும் கிடையாது.  சிறப்புத் திறமை பெற்றிருந்தாலும் இரு மாதங்களுக்கு மேல் பணி இல்லை என்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறியே ஆக வேண்டிய நிலையில் உள்ளனர்.

தற்போது எச்1பி விசா பெற்றுள்ள 2,50,000 இந்தியர்கள் நிரந்தர குடியுரிமை கோரி அமெரிக்க அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.   இவர்களில் 2 லட்சம் பேருக்கு ஜூன் மாத  இறுதி வரை நிரந்தர குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை. இவர்கள் அனைவரும் வரும் ஜூன் மாதம் அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் இந்தியர்கள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இது குறித்து இந்தியாவைச் சேர்ந்த  மானசி வசவாடா, “அமெரிக்காவில் எச்1பி விசாக்களில் பணி புரியும் எங்களில் பலர் ஊதியம் இல்லாத விடுமுறையில் இருக்கிறோம்.  எனவே நாங்கள் இந்தியா திரும்ப வேண்டும் என்பதால் அதற்காகத் தயாராகி வருகிறோம்.   ஜூன் மாதத்துக்குள் எங்களுக்குப் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை எனத் தோன்றுகிறது’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக இந்தியா தனது எல்லைகளை மூடி உள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் இந்தியா வர அனுமதி கிடையாது.  அமெரிக்கா வாழ் இந்தியர்களால் இந்தியா வர நினைத்தாலும் வர முடியாத நிலை உள்ளது.  எனவே இந்த 2 லட்சம் இந்தியர்களும் விசா காலாவதி ஆகும் நிலையில் சிறைக்குச் செல்ல நேரிடலாம்.  அப்படி இல்லை எனில் இவர்களை அமெரிக்க அரசு முகாம்களில் அடைத்து வைக்கவும் வாய்ப்புண்டு.

குறிப்பாக அமெரிக்காவில் கல்விக்கடன் பெற்று கல்வி பயிலும் மாணவர்கள் நாடு திரும்பி பணியில் சேர்ந்து தங்கள் கடனை அடைக்க வேண்டி வரும்.   இந்தக் கடனை அடைக்கும் அளவுக்கு இந்தியாவில் இந்த மாணவர்களுக்கு ஊதியம் கிடைக்காது.   எனவே இவர்களால் இந்தியாவுக்கு வந்தாலும் கடும் கடன் சுமையுடன் காலம் தள்ள வேண்டி வரும்.

எனவே அமெரிக்காவில் வசிக்கும் இந்திய ஊழியர்கள் அமெரிக்க அரசுக்கு புது கோரிக்கைகள் வைத்துள்ளனர்.  அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 60 நாட்கள் கெடுவை 180 நாட்களாக நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்துள்ளன.  இதற்காக ஒரு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.    சுமார் 1 லட்சம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கையெழுத்து கிடைத்தால் அரசு இதைக் கவனிக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.