சீனா புறப்பட்டு சென்ற இந்தியாவின் 2 முக்கிய போர்க் கப்பல்கள்!

பெய்ஜிங்: சீனக் கடற்படையின் 70ம் ஆண்டு தினத்தை ஒட்டி, அந்நாட்டு கடற்படை நடத்தும் சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கு பெறுவதற்காக, இந்தியாவிலிருந்து இரண்டு போர்க் கப்பல்கள் புறப்பட்டுச் சென்றுள்ன.

ஐஎன்எஸ் – கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் – சக்தி என்ற பெயர்களைக் கொண்ட அந்த இரண்டு போர்க் கப்பல்களும், ஏப்ரல் 21ம் தேதி சீனாவை அடையும் என்று கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் 23ம் தேதி சீன அதிபர் சி ஜின்பிங் பார்வையிடவுள்ள சர்வதேச கடற்படை அணிவகுப்பில் இந்த 2 கப்பல்களும் இடம்பெறவுள்ளன. அதேசமயம், இந்த அணிவகுப்பில் பாகிஸ்தானின் போர்க் கப்பல்கள் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

குறைந்தது 2 பாகிஸ்தான் போர்க் கப்பல்களாவது இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரபிக் கடலில், இந்திய போர்க் கப்பல்களின் அதிக நடமாட்டத்தால், பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் போர்க் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்தியாவின் கடற்படை வலிமை உலகிற்கு பறைசாற்றப்படவுள்ளது.

– மதுரை மாயாண்டி