2,o  ஷங்கருக்கு சில கேள்விகள்!

வெங்கடேஷ் ஆறுமுகம்  அவர்களது  முகநூல் பதிவு

முதலில் ஹாலிவுட் தரத்திற்கு கிராபிக்ஸ் மற்றும் இதர தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தமைக்கு உங்களுக்கு மிகப் பெரிய பூங்கொத்து.. ஆனால் கதையில் இருக்கும் மெகா மெகா லாஜிக் ஓட்டைகளை யார் நிரப்புவது? இது சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஹாலிவுட்டில் இப்படி படம் வந்தால் கேள்வியே நாம் கேட்பதில்லை ஆனால் தமிழில் வந்தால் மட்டும் என்ன கேள்விகள்?

இப்படி சில பதிவுகள் பார்த்தேன்.. ஒரு சராசரி சினிமா ரசிகனாக சுஜாதா அவர்களின் மானசீக மாணவனகாக.. அதிகம் டெக்னாலஜி தெரியாத, பெரிய அறிவியல் படிப்பு படித்திராத என் போன்ற சிறியவர்களின் சந்தேகங்களை மட்டும் கேட்கிறேன்.. அது அபத்தமாக இருந்தால் உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் நான் தயார்.! இந்த சயின்ஸ் ஃபிக்‌ஷனில் ஆரா எனும் ஒளி அதில் வரும் நல்ல மற்றும் தீய சக்தி போன்ற அதீத கற்பனைகளெல்லாம்…

சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்றும்.. உங்கள் சிறந்த க்ரியேட்டிவிட்டி என்றும் விட்டுவிடுகிறேன்.! உங்கள் கடின உழைப்பு, தமிழ் சினிமாவில் ஹாலிவுட் தரம் என்பெதெல்லாம் தாண்டி எனது சந்தேகங்கள் திரைக்கதை பற்றியது அதிலிருந்து லாஜிக்காக சில கேள்விகள்.!

1. ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் செல்போன்கள் தமிழக எல்லைக்குள் வந்ததும் களவு போகிறது.! அப்போ ஆந்திராவில் அமைக்கப்பட்ட செல்போன் டவர்களால் பறவைகளுக்கு ஆபத்தில்லையா அல்லது பக்‌ஷிராஜா எடப்பாடி போல தமிழகத்திற்கு மட்டும் தான் பொறுப்பா?

2.தீயசக்தியான ஆராவை ஏன் நியூட்ரலைஸ் செய்து அடக்கி எடுத்து வரவேண்டும் க்ளைமாக்சில் அழித்தது போல அதை அழித்து இருக்கலாமே.! இது என்ன சாத்தான்களை குடுவையில் அடைக்கும் மாந்தீரிகத்தின் லேட்டஸ்ட் டிஜிட்டல் டெக்னாலஜியா?

3. பக்‌ஷிராஜாவை ஒரே ஒரு சிட்டியே அடக்கி நியூட்ரலைஸ் செய்து அடைத்துவிட்ட பின்பு அரசாங்கம் 500 சிட்டி ரோபாக்களை இராணுவத்திற்காக தயார் செய்ய அனுமதி தந்த பின்பும் வில்லன் பக்‌ஷிராஜாவை விடுவிக்கிறான் என்பது அபத்தமாக இல்லையா?

4. IRDA அலுவலகத்தில் பணிபுரிபவனாக இருந்தாலும் ஷாப்பிங் மாலுக்குள் போவது போல அசால்டாக வில்லன் அங்கு நுழைவதும்.. நியூட்ரலைஸ் செய்தவனை எளிதாக 3 பாஸ்வேர்டுகளில் டி நியூட்ரலைஸ் செய்வதும் காதில் பூ.. அல்ல அல்ல ஹெக்டேர் கணக்கில் பெரிய பூந்தோட்டமே சுற்றியுள்ளீர்கள்.!

5. செல்போன் நெட்வொர்க் உரிமையாளர், அமைச்சரை பழி வாங்குவது கூட லாஜிக்காக மிகவும் சரி.. ஆனால் செல்போன் ஷோரூம் வாசலில் நின்று கோஷம் போட்டவரை அப்புறப்படுத்திய செல்போன் கடை உரிமையாளருக்கும் மரண தண்டனை என்பது ஓவராக இல்லை.?

6. ₹500 லஞ்சம் வாங்குபவனையும் ₹200க்கு சாட்சி கையெழுத்து போட்டவனையும் கும்பிபாகத் தண்டனை தரும் வழக்கமான ஷங்கர் பட ஸ்டைல் தானே அது.! ஏன் பெரிய குற்றவாளிகளை நீங்கள் குறி வைப்பதே இல்லை?

7. இதுதான் படத்தில் மரியானா டிரெஞ்ச் அளவிற்கு ஆழமான ஓட்டை.. விஞ்ஞானி வசீகரனின் உடலுக்குள் புகுந்து ஆட்டிப் படைக்கும் பக்‌ஷிராஜா.. அந்த செல்போன் கம்பெனி உரிமையாளர் உடலில் புகுந்து செல்போன் டவர்களை அழித்திருக்கலாம்.. அல்லது அந்த அமைச்சர் உடலில் புகுந்து தீவிரமான சட்டங்களை அமல் படுத்தியிருக்கலாம்.. எப்படி சார் இதை கோட்டை விட்டிங்க.?

பழைய ரஜினியையும் 3.0 வெர்ஷனையும் உங்கள் மிரட்டலான டெக்னாலஜி அறிவிலும் இவைகள் எல்லாம் மறந்துபோகும் என எதிர் பார்த்தீர்களா? சுஜாதா போன்றவர்கள் உங்களுடன் இல்லை என்பது நிச்சயம் அப்பட்டமாகத் தெரிகிறது.! வெகு நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் என்னும் மனிதரை மீட்டுக் கொண்டுவந்தமைக்கும் உங்கள் உழைப்புக்கும் இப்போதும் ஒரு சல்யூட்.. ஆனால் திரைக்கதை லாஜிக்கில் கோட்டை விட்டுவிட்டீர்கள்.!

இந்தப்பதிவில் நான் உங்களை குற்றம் கூறவில்லை.. திரைக் கதையில் நீங்கள் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம் என்பதே என் விருப்பம்.. உங்கள் மனம் புண்படும்படியாக ஏதும் இருந்தாலோ தவறிருந்தாலோ என்னை மன்னிக்கவும்.. குறைகளை நண்பர்கள் மட்டுமே சுட்டிக்காட்டுவார்கள் நான் உங்கள் நண்பன்.! அதிகம் பேசியிருந்தால் பொருத்தருள்க.!

3.0 சிறப்பாக வர அட்வான்ஸ் வாழ்த்துகள்..

#questions #Shankar  #2.o: