ரியாத்

னது இரு எண்ணெய் கப்பல்கள் நாசவேலை தாக்குதலால் பழுதடைந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்த முறிவுக்கு பிறகு ஈரான் மீது அமெரிக்கா வர்த்தகத்தடை விதித்தது.   அதை ஒட்டி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய நிறுத்த எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா இந்த மாதம் 2 ஆம் தேதி வரை கெடு விதித்தது.   அந்த கெடு முடிந்துள்ள நேரத்தில்  ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி அதிக அளவில் யுரேனியத்தை செறிவூட்ட உள்ளதாக அறிவித்தது.

அதை ஒட்டி ஈரானை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் தனது கப்பல் மற்றும் விமானபடைகளை அமெரிக்கா குவித்தது.   இந்நிலையில் அமீரக கடற்கரை நகரமான ஃபுஜைரா அருகே எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகின.   ஆனால் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா மற்றும் அமீரகம் உறுதி செய்து தகவல்கள் அளிக்கவில்லை.

சவுதி அரேபியா, “எங்கள் நாட்டில் இருந்து அமெரிக்காவில் உள்ள சௌதி ஆரம்கோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கப்பல் மூலம் கச்சா எண்ணெய் அனுப்பினோம்.   இந்த கப்பல்களில் இரு கப்பல்கள் நாசவேலை தாக்குதலால் பாழாகி உள்ளன.    ஆனால்  இந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை.   அத்துடன் கச்சா எண்ணெய் கடலில் சிதறவில்லை.   அதே நேரத்தில் இரு கப்பல்களும் மிக கடுமையாக பழுதடைந்துள்ளது.” என தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பின் தலைவரான அப்துல்லதிப் பின் ரஷித் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அத்துடன் பகரைன், எகிப்து மற்றும் ஏமன் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.   அமீரகம் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது.    ஆனால் மேற்கொண்டு எந்த விவரமும் தெரிவிக்க மறுத்து விட்டது.   அமெரிக்க கடற்படையும் இது குறித்து எதுவும் கூறவில்லை.