சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள அம்மா உணவகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. வினர் 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை இந்த உணவகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த இருவர், அங்கிருந்த சமயலறையில் உள்ள பொருட்களை சூரையாடினர்.

பின்னர், வெளியில் இருந்த அம்மா உணவக பெயர் பலகையையும் விலை பட்டியலையும் கிழித்தெறிந்தனர்.

இந்த அத்துமீறல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு முன்பே அராஜக செயல்களில் இறங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இது குறித்து விசாரித்த போது அந்த இருவரும் தி.மு.கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் என்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அந்த பகுதி செயலாளர் அம்மா உணவகத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பெயர் பலகையை சரி செய்து கொடுத்ததோடு, அம்மா உணவகத்தை சூறையாடிய இருவர் மீதும் காவல் துறையில் புகார் அளித்தார்.

விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நவசந்தர் மற்றும் சுரேந்தர் ஆகிய இருவர் என்பதும் இவர்கள் இருவரும் தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் தி.மு. கழகத்தில் இருந்து உடனடியாக நீக்கினார்.

இதனை தொடர்ந்து, அந்த இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்கள் மீது 294, 427, 448 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியம் “அத்துமீறல் மற்றும் அராஜகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தி.மு.க. மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருப்பதாக தெரிவித்தார்.”