‘+2 பிராக்டிக்கல் தேர்வு’ அறிவித்தபடி நடைபெறும்: தேர்வுத்துறை இயக்குனர் உறுதி

--

சென்னை:

பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவித்தபடி பிப்ரவரி 1ந்தேதி (வெள்ளிக் கிழமை) அன்று தொடங்கும்  என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றமும், போராட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து, அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.

இந்த நிலையில், பிளஸ்-2 மாணவர்களின் பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வு (பிராக் டிக்கல் எக்சாம்) வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 1ந்தேதி) தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள  தேர்வுத்துறை இயக்குனர்,  பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவித்தபடி வெள்ளியன்று தொடங்கும்  என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும்  ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக செய்முறைத் தேர்வில் எந்தவித  பாதிப்பு ஏற்படாது என்றும்,  ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என்றும்  கூறி உள்ளார்.