மயிலாடுதுறை:

ம்பாளுக்கு சுடிதார் அணிந்தது போல அலங்காரம் செய்த 2 அர்ச்சகர்களை திருவாவடுதுறை ஆதீனம் பதவி நீக்கம் செய்துள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது மயூரநாதர் கோவில் ஆகும்.   இந்தக் கோவிலின் அம்பாள் பெயர் அபயாம்பிகை அம்பாள் ஆகும்.   இந்தக் கோவில் திருவாவடுதுறை ஆதினத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 3 ஆவது தை வெள்ளிக்கிழமை என்பதால் அம்பாளுக்கு சிறப்பு, அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.    இந்தக் கோவிலில் வெகுநாளாக அர்ச்சகராக பணி புரிபவர் கல்யாண சுந்தர குருக்கள்.   அவர் தனது மகன் ராஜு என்பவரை தனக்கு உதவியாக பணியில் அமர்த்தி உள்ளார்.     வெள்ளிக்கிழமை சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றுள்ளது.   அலங்காரம் முடிந்த பின் அம்பாளுக்கு ஜரிகை காகிதங்களால் பல வண்ண புடவை அமைப்பது வழக்கம்.

ஆனால் அர்ச்சகர் ராஜு வழக்கத்துக்கு மாறாக அம்பாளுக்கு கலர் ஜரிகை காகிதங்களால் சுடிதார், துப்பட்டா அகியவை அணிந்திருப்பது போல் அலங்காரம் செய்துள்ளார்.     அதைக் கண்ட பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   பக்தர்கள்  அம்பாளின் இந்த அலங்காரத்தை மொபைலில் புகைப்படம் எடுத்து வாட்ச்அப்  மூலம் அனுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படம் இணையம் எங்கும் வைரலாகவே பக்தர்கள் கொதித்தெழுந்தனர்.   அம்பாளுக்கு வழக்கமான புடவை இல்லாமல் நவநாகரீக சுடிதாரா என பலரும் கேள்வி எழுப்பினர்.  இந்த விவகாரம் திருவாவடுதுறை ஆதினத்துக்கு தெரிய வந்தது.   அவர்கள் கல்யாண சுந்தரம் மற்றும் ராஜு ஆகிய இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.