சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கி வரும், திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய கட்சி உள்பட மேலும் பல சிறிய கட்சிகளும் சேர்ந்து வருகின்றன.

ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று காலை நடைபெற்ற 2வது கட்ட பேச்சு வார்த்தையை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் 2வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில், இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், அண்ண அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன்,  தமிழகத்தில் காலியாக உள்ள  21 தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு  ஆதரவளிக்கும் என்றும், தனது கட்சி  கதிர் அரிவாள் சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் கூறினார்.