‍மேட்டுக்குடி செல்வந்தர்களுக்கு 2% வரி – சமாஜ்வாடி கட்சி அதிரடி

லக்னோ: ரூ.2.5 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு வைத்துள்ள உயர்ஜாதி பிரபலங்களின் சொத்துக்கள் மீது, 2% வரி விதிக்கப்படுமென, சமாஜ்வாதி கட்சியின் தேர்தலுக்கான தொலைநோக்கு ஆவணம் தெரிவிக்கிறது.

இந்த தொலைநோக்கு ஆவணத்தை, அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டார். இதற்கு, மகாபரிவர்தன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது; நாட்டின் 10% உயர்குடியினர், தேசத்தின் மொத்த சொத்துக்களில் 60% ஐ தங்கள் வசம் வைத்துக்கொண்டுள்ளனர். இதன்மூலம், உலகிலேயே அதிக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது.

உயர்நிலையில் சலுகைப் பெற்று வாழ்வோர், நம்மைப் பார்த்து சாதியவாதிகள் என்கின்றனர். ‍மேலும், நம்மை பதவி வெறி பிடித்தவர்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர்கள் சுரண்டிக் கொழுப்பதற்காக நம்மைப் பார்த்து பேசும் வார்த்தைகள்தான் இவை.

பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக ஆகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். நாட்டு மக்கள்தொகையின் பாதி அளவினர் வைத்திருப்பதோ, வெறும் 8% சொத்துக்கள்தான்.

இந்த அநீதியை களைந்து, சமூக நீதியை நிலைநிறுத்தும் நோக்கத்தில்தான், ‍ரூ.2.5 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் மேட்டுக்குடி பிரபலங்களுக்கு 2% வரி விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழலில், சமாஜ்வாதி கட்சியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.