காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் இன்று 2 பயங்கரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர்.  நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய துருப்புகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியான நிலையில், பழிக்குப்பழியாக இன்று 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம்  நவ்காம் மாவட்டம் சூட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதை எதிர்த்து  இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில்  2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, அந்த பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது