2 பெண்கள் தரிசனம்: பரிகார பூஜைக்கு பின் மீண்டும் அய்யப்பன் கோவில் நடை திறப்பு!

பம்பை:

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்ததை தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதற்கான பரிகார பூஜைகள் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் கோவில் நடை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு உள்ளது.

பாரம்பரியம் மிக்க சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் காலங்காலமாக பெண்கள் அனு மதிக்கப்படுவது இல்லை. ஆனால், இது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு கூறியது.

இது அய்யப்ப பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கோவிலுக்கு செல்ல முயன்ற பல பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலை யில், 2 பெண்கள் கேரள மாநில அரசு மற்றும் மப்டி உடை அணிந்த அதிரடிப்படை காவல்துறை உதவியுடன் கோவிலின் பின்வாசல் வழியாக அதிகாலை 3.30 மணி அளவில் கோவில் சன்னிதானத்திற்குள் அழைத்து வரப்பட்டனர்.

இதையறிந்த தந்திரிகள் உடடினயாக கோவில் நடைறை சாற்றினர். இது பரபரப்பை ஏற்படுத்தி யது. இதையடுத்து  பெண்கள் வந்த தோஷத்தை கழிக்கும் வகையில் பரிகார பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கோவில் முழுவதும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் பூஜைகள் நடைபெற்றன. சுமார்  1 மணி நேரத்திற்கும் மேலாக பூஜைகள் நடைபெற் றதை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.

அதையடுத்து பக்தர்கள் 18 படிகளை ஏறி அய்யப்பனை தரிசித்து வருகின்றனர். பெண்கள் கோவில் சன்னிதானம் வந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

கேரள மாநில பினராயி தலைமையிலான கம்யூனிஸ்டு அரசின் இந்த செயலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், ஐயப்ப பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் ஜனவரி 14-ம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.