சென்னை ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட 2 வயது குழந்தை திண்டுக்கலில் மீட்பு!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 13ம் தேதி அதிகாலை கடத்தப்பட்ட 2 வயது குழந்தை அன்று பிற்பகலில், திண்டுகல்லில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையை பெற்றோரிடமிருந்து கடத்திய  மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான தீபக் மொண்டல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை-நாகர்கோயில் எக்ஸ்பிரஸில் பயணித்த ஒரு சில பயணிகளுக்கு தீபக் மீது சந்தேகம் எழுந்ததால் காவல்துறையினருக்குத் தகவல் தரப்பட்டது.. TOI இன் செய்திக் குறிப்பின் படி, அவர் தொடர்ந்து அழுதுகொண்டிருந்த அக்குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். பயணிகள் அந்தக் குழந்தை பற்றி அவரிடம் கேட்டபோது, ​​அவருடைய பதில்கள் திருப்திகரமாக இல்லாததைக் கண்டு அவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

13ம் தேதி காணாமல் போன குழந்தையைப் பற்றிய  புகாரை அவரது பெற்றோரிடமிருந்து  போலீசார் பெற்ற பின்னர்,  ​​சிசிடிவி காட்சிகளை  பரிசோதித்தனர். அதில், அந்த நபர் ​​கடந்த சில நாட்களாக நிலையத்தை சுற்றித் திரிந்து சிறு சிறு வேலைகளை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

சி.சி.டி.வி காட்சிகளிலிருந்து அவரது புகைப்படம் போலீஸ் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டுத் தேடல் விரைவு படுத்தப்பட்டது.

தகவல்களின்படி, சிறுமியின் பெற்றோர் மர்ஜினா மற்றும் ஹமீத் 10 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்ததாகவும் அவர்கள் தீபக்கை மத்திய நிலையத்தில் சந்தித்து நட்பு கொண்டிருந்ததாகவும் தெரிய வந்தது. குழந்தையின் தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தீபக் குழந்தையைக் கடத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

TOI அறிக்கையின்படி, தீபக் தனபாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸில் ஏறி பின்னர் சேலத்தில் மும்பை-நாகர்கோயில் எக்ஸ்பிரஸுக்கு மாறினார். அவரிடம் பயணிகள் விசாரித்தபோது, ​​அவர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கு காவல்துறையினர் குழந்தையை மீட்டனர்.