டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 20.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகளும் கடந்த 16ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

9ம் நாளான நேற்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 31 ஆயிரத்து 466 பேருக்கு ஊசி போடப்பட்டது. அதில் 10 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது தெரிய வந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இந் நிலையில் இன்று இரவு 7 மணி வரை 5,615 பேர் உள்பட நாடு முழுவதும் 20.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுபபூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 6 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் எண்ணிக்கை 73,953 பேர் ஆகும். இன்று மட்டும் 4926 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவர்களில் 4739 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியையும், 187 பேர் கோவாக்சின் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டனர்.