உ.பி.யில் பயங்கரம்: சரக்கு லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதல்! 20 பேர் பலி

--

லக்னோ:

த்தரப் பிரதேசம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரியுடன் பயணிகள் சொகுசு பேருந்து நேருக்கு நேரில் மோதிக்கொண்டதில் தீப்பற்றிக்கொண்டது. இந்த விபத்தில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உ.பி.யை சேர்ந்த தனியார் சொகுசு பேருந்து 45 பயணிகளுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஃபரூக்காபாத் என்ற பகுதியில்  நெடுஞ்சாலையில் எதிரே வந்த சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த மோதல் காரணமாக பேருந்தில் இருந்த டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது, இதனால் பஸ்சினுள் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு இறங்கி ஓடினர். அதற்கு தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியதால், பல பயணிகள் தீயில் சிக்கி கருகினர்.

இந்த கோர விபத்தில்  பேருந்து பயணிகள் 20 பேர் தீயில் கருகி இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பேருந்திலிருந்து சிறுகாயங்களுடன் தப்பித்து உயிர்பிழைத்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியில்  கன்னூஜ் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும்  ஈடுபட்டு வருகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.