தமிழக போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை:
மிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை பல்லவன் இல்லத்தில்  போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஏற்கனவே கடந்த  4ந்தேதி  போராட்டம் நடத்தியதற்காக சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்து துறை கூறியதை கண்டித்தும்,  தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதைத்தொடர்ந்து, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் நடத்தியபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான போனஸ் குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே தமிழக அரசின்   பொதுத்துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளுக்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று போக்குவரத்து துறைக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.

8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை சேர்த்து மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.