சென்னை:

மெட்ரோ வாட்டர் அதிகாரிகளின் அதிரடி சோதனையில், அண்ணா நகர் பகுதியில் மின்மோட்டார் மூலம் திருட்டுத்தனமாக மெட்ரோ வாட்டர் உறிஞ்சி வந்த 20 வீடுகளில் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அங்கிருந்த மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் கடுமையான குடி தண்ணீர் தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், காலையில் ஓரிரு மணி நேரம் வரும் மெட்ரோ வாட்டரையும் சிலர் மின்மோட்டாகள் வைத்து உறிஞ்சி வருகின்றனர். இதன் காரணமாக மற்றப்பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக குவிந்த ஏராளமான புகார்களை தொடர்ந்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வீடுகளில்  அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் அண்ணாநகர் குடியிருப்பு பகுதி களில் நடைபெற்ற சோதனையின்போது பலரது வீடுகளில், மெட்ரோ வாட்டர் குழாயில் மின் மோட்டார்கள் பொருத்தி தண்ணீரை உறிஞ்சிவந்தது தெரிய வந்தது.

அனுமதியின்றி மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சி வந்த மோட்டார்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த வீடுகளின் தண்ணீர் இணைப்பை துண்டித்ததோடு, அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

கலை 6 மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டதாகவும், பல வீடுகளில் மின் மோட்டார் வைத்து சம்ப்-ல் தண்ணீர் சேமித்து, பின்னர் அதை வாட்டர் டேங்கில் ஏற்றி உபயோகப்படுத்தி வந்தது தெரிய வந்தாகவும் கூறினர்.

தற்போது மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சி வந்த வீடுகளுக்கு ஒரு வருடம் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும்,அவர்கள் மீண்டும் தண்ணீர் இணைப்பு பெற ரூ.10ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அதே வேளையில் அந்த வீட்டில் கடை போன்ற வணிக நிறுவனங்கள் செயல்பட்டால், அதற்கான அபராத தொகை ரூ.20 ஆயிரம் என்றும் தெரிவித்து உள்ளனர்.