2 மாதத்தில் 20 கோடி சத்துணவு முட்டைகள் தேக்கம்

நாமக்கல்:
ண்ணை தொழிலை காப்பாற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி பருப்புடன் சேர்த்து சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசுக்கு பண்ணையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மார்ச் 25-இல் தொடங்கிய முதல் கட்ட ஊரடங்கு 21 நாள்களுக்கு பின் ஏப்.14 முதல் மே 3-ஆம் தேதி வரையில் மேலும் 19 நாள்களுக்கு நீடிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக மட்டும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடைகள் திறக்கப்படுகின்றன. ஊரடங்கின் தொடக்க நாள்களில் வீட்டில் முடங்கியிருந்த மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்தது. அம்மா உணவகம் மற்றும் தன்னார்வலர்கள் முட்டைகளை வழங்கி வந்ததால், முட்டை விலை உயரத் தொடங்கியது.

நாமக்கல்லில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் முட்டை அதிகளவில் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் வரும் நாள்களில் மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதும், பல குடும்பங்கள் வருவாயின்றி தவிப்பதும் முட்டை விற்பனையை மீண்டும் சரிவு நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்தநிலையில் பண்ணை தொழிலை காப்பாற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி பருப்புடன் சேர்த்து சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசுக்கு பண்ணையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 மாதத்தில் மட்டும் 20 கோடி சத்துணவு முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் முட்டையின் விலை குறைந்து இருப்பதும், முட்டை உற்பத்தி செலவு அதிகரித்தும் உள்ளதால் தாங்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்