குடியுரிமை சட்ட த்தை எதிர்த்து 20 எதிர்க்கட்சிகள் தீர்மானம்

--

டில்லி

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை  பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து 20 எதிர்க்கட்சிகள் தீர்மானம் இயற்றி உள்ளன.

நாடெங்கும் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.    பல மாநிலங்களில் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.  டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது.    இந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்த அடுத்த நடவடிக்கை குறித்து விவாதிக்க நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டம் ஒன்றைக் கூட்டி இருந்தார்.   நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட எதிர்க்கட்சிகள் தங்களுக்குள்ளும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி ராஜா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹெமந்த் சோரன் உள்ளிட்ட 20 கட்சித்தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.   காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட 20 எதிர்க்கட்சிகள் இணைந்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளன. அந்த தீர்மானத்தில், ”குடியுரிமை சட்டம்,  தேசிய குடிமக்கள் பதிவேடும்., மற்றும் மக்கள் தொகை பதிவேடு ஆகியவை, அரசியல் சாசனத்துக்கு விரோதமான ஒரு தொகுப்பு ஆகும்.  இவை ஏழை, எளிய மக்கள், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர், மதம் மற்றும் மொழி ரீதியிலான சிறுபான்மையினரைக் குறி வைத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன.  ஆகவே, இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மக்கள் தொகை, கணக்கெடுப்பு பணியை நிறுத்த வேண்டும்.” என  கூறப்பட்டுள்ளது.

இந்த  கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ”தற்போது நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது,  அத்துடன்  வேலை வாய்ப்பு அடியோடு இல்லை, எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. இத்தகைய குறைகளை மூடி மறைக்கும் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டம், குடிமக்கள்.பதிவேடு ஆகியவற்றின் மூலம் அவர்களுடைய நிர்வாகத் திறமையின்மை மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாதது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.   எதிர்க்கட்சிகள் இணைந்து  மத்திய அரசின் முயற்சிகளை முறியடிப்போம்.

அரசின் மீதான மக்களின் கோபம் தற்போது நாடு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. ஆகையால் மக்களைத் திசைதிருப்பும் வகையில் மோடி மற்றும் அமித் ஷா தொடர்ந்து பொய் தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர். நிச்சயம் அவர்களுடைய திட்டம் வெற்றி பெற விட மாட்டோம்”:என உரையாற்றினார்.