20 சதவீதம் போனஸ்: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

--

சென்னை:

மிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவித போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதனால் 3 லட்சத்து 68 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குவது தொழிலாளர்களின் உழைப்பே ஆகும்- தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும் – உற்பத்தியை பெருக்கி, அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

எனவே தான் தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2015-2016ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு 21 ஆயிரம் ரூபாய் என மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது – கடந்த ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் என இருந்த தகுதி வரம்பை தளர்வு செய்து அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் போனஸ் பெற வழிவகை செய்யப்பட்டதைப் போலவே, தற்போது 21 ஆயிரம் ரூபாய் என்ற சம்பள உச்சவரம்பை தளர்வு செய்து அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போனஸ் கணக்கிட ஏற்கெனவே 3,500 ரூபாய் என இருந்த மாதாந்திர சம்பள உச்ச வரம்பு, திருத்திய போனஸ் சட்டம் 2015-ன் படி, 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது – அந்த அடிப்படையில் 2015-2016-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித் தொகை வழங்கப்படும்.

இதன்படி, இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும் – பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு, 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் ஒன்று புள்ளி ஆறு ஏழு விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகைக்கு மிகாமலோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ வழங்கப்படும்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகைக்கு மிகாமல் வழங்கப்படும் – ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் ஒன்று புள்ளி ஆறு ஏழு விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8 ஆயிரத்து 400 ரூபாயும், அதிகபட்சம் 16,800 ரூபாயும் பெறுவர் – தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67 ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு 476 கோடியே 71 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.